நிலத்தை அபகரித்த தி.மு.க., நிர்வாகி மீட்டு தரக்கோரி மகளுடன் பெண் தர்ணா
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே பிக்கனஹள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி செந்தாமரை, 33. இவர் தனக்கு பாகமாக கிடைத்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகி ஒருவர், முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறி, கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று தனது மகளுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.இது குறித்து, அவர் கூறியதாவது:எனது கணவர், 13 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு ஒரு மகள் உள்ளார். எங்களுக்கு ஆதரவாக இருந்த மாமனார் இறந்த நிலையில், மாமானாருடைய சொத்தில், 13 சென்ட் நிலம் பாகமாக கிடைத்தது. இதை, தி.மு.க.,வை சேர்ந்த மாநில நிர்வாகி சுப்ரமணி என்பவர் முறைகேடாக, 2016ல் கிரயம் செய்துள்ளார். நிலமோசடி குறித்து, நீதிமன்றத்தில் சுப்ரமணி மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். மேலும் மாவட்ட பதிவாளர், மாரண்டஹள்ளி சார்பதிவாளர் ஆகியோருக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சுப்ரமணி கிரையம் செய்த நிலத்தை, 2021ல் ஒருவருக்கும், கடந்த, 23 அன்று வேறு ஒருவருக்கும் மாற்றி விற்பனை செய்துள்ளார். இது குறித்து மாரண்டஹள்ளி சார்பதிவாளர் அலுவலகம் சென்று, நிலம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை மற்றும் நீதிமன்ற நோட்டீஸ், தடங்கல் மனு, நிலத்தின் பத்திரம் உள்ளிட்டவை வழங்கி, வேறு நபர்களின் பெயரில் ஏன் கிரயம் செய்தீர்கள் என கேட்டேன். அதற்கு உரிய பதில் அளிக்காததால், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தனது நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண்டும் என்பதற்காக தர்ணாவில் ஈடுபட்டேன்.இவ்வாறு கூறினார்.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சமாதானம் செய்து, அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர்.இது குறித்து, தி.மு.க., நிர்வாகி சுப்ர மணி கூறுகையில்,''கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், செந்தாமரையின் மாமனாரின் அண்ணன் முனிராஜ் என்பவரிடம் விலை பேசி நிலத்தை வாங்கினேன். இதில், எங்கள் குடும்பத்தில் பாகப்பிரிவினை செய்த போது. என் அண்ணனுக்கு நிலத்தை மாற்றி கொடுத்தேன். என் நற்பெயருக்கு எந்தவித களங்கமும் விளைவிக்க முடியாது. முதல்வரின் ஆட்சியில், அவரின் வழிப்படி நடந்து வருகிறேன். நில அபகரிப்பு, ஏமாற்றுதல் என்ற பேச்சுக்கு இடம் இல்லை. இது திட்டமிட்டு செய்யப்படும் வதந்தி,'' என்றார்.