உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தீபாவளி பரிசு கிடைக்காததால் தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி

தீபாவளி பரிசு கிடைக்காததால் தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி

அரூர், தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு தீபாவளி பரிசாக பணமுடிப்பு வழங்கப்பட்ட நிலையில், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்களுக்கு பணம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.தீபாவளியை குதுாகலமாக கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை சார்பில், பணமுடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்றிய செயலாளர்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய்; நகர செயலாளர்களுக்கு, 50,000, ஒன்றிய துணை செயலாளர், அவைத் தலைவர் ஆகியோருக்கு, தலா, 10,000, வார்டு மற்றும் கிளை செயலாளர்களுக்கு, 2,000 ரூபாய்; ஒவ்வொரு பூத் கமிட்டிக்கு, 5,000 ரூபாய் என, மாவட்டம் முழுதும் உள்ள நிர்வாகிளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொகை சில நாட்களுக்கு முன்பே, நிர்வாகிகளைச் சென்றடைந்து விட்டது. இதனிடையே, மாவட்ட இளைஞரணி உள்ளிட்ட அணிகளின் அமைப்பாளர்களுக்கு, துணை முதல்வர் உதயநிதி சார்பில், நேற்று முன்தினம், தலா, 25,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்களுக்கு பணம் எதுவும் வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:மற்ற மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமை அளித்த தொகையுடன், தங்களது சொந்த பணத்தை கூடுதலாக சேர்த்து நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளனர். ஆனால், தர்மபுரி மாவட்டத்தில், தலைமையில் இருந்து வழங்கப்பட்ட பணத்தை மட்டுமே மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளனர். அரூர் தொகுதி கடந்த சில வாரங்களுக்கு முன், மேற்கு மாவட்டத்தில் இருந்து, கிழக்கு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது, அரூர் தொகுதியில் உள்ள மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட அணிகளின் அமைப்பாளர்களுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், கடந்த முறை மேற்கு மாவட்ட செயலாளர் சார்பில், சிறப்பாக செயல்பட்ட மாவட்ட அணிகளில் உள்ள துணை அமைப்பாளர்கள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. அதே போல், பூத் கமிட்டிக்கு வழங்கப்பட்டுள்ள தொகை மிகவும் குறைவானது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை