கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கம்பம் நடல்
சேலம், சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், 22 நாள் நடக்கும் ஆடித்திருவிழாவையொட்டி, கடந்த, 2ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து, 22ல் பூச்சாட்டுதல், 23ல் கொடியேற்றம் நடந்தது. நேற்று இரவு, 8:00 மணிக்கு கம்பம் நடும் விழா தொடங்கியது.வேம்பால் ஆன, 7 அடி உயர கம்பத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமம், வேப்பிலை சகிதமாக அலங்கரித்து, அதை நேர்த்தியாக சுமந்தபடி, அம்மன் சன்னதியின் உட்பிரகாரம், கொடிமரத்தை ஒருசேர மும்முறை வலம் வந்த பின், பக்தர்கள் புடைசூழ, அம்மனுக்கு நேரெதிரே, 8:43 மணிக்கு கம்பத்தை நட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள், 'ஓம்சக்தி, பராசக்தி' என, பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.தொடர்ந்து மாரியம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. அதையொட்டி, பல்வேறு வாசனை திரவியங்கள், நறுமண பொருட்களால் சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்து, சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, பூசாரி சிவா ஆகியோர் செய்திருந்தனர்.அதேபோல் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன், பாவடி மாரியம்மன், பட்டைக்கோவில் சின்ன மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், சஞ்சீவிராயன் பேட்டை காளியம்மன் என, மாநகரில் எட்டுப்பட்டி, 18 பேட்டைகளை காத்தருளும் அம்மன் கோவில்களில் கம்பம் நடும் விழா நடந்தது.பூச்சாட்டுதல் விழாதாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடக்கமாக கம்பம் நடும்விழா கடந்த, 24ல் நடந்தது. தொடர்ந்து கோவில் அருகே உள்ள முத்து குமாரசாமி கோவிலில் ஆடித்திருவிழாவுக்கு பூச்சாட்டுதல் விழா நேற்று நடந்தது. பக்தர்கள் உடம்பில் சந்தனம் பூசிக்கொண்டு, வாளுடன், முக்கிய வீதிகள் வழியே ஆடியபடி கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து பூச்சாட்டுதல் விழா நடந்தது. இக்கோவில் திருவிழா ஆக., 5ல் நிறைவு பெற்று, கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், 6ல் தீமிதி விழா நடக்கும்.