உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காரில் சென்ற டாக்டரை கடத்தி பணம், நகை பறித்து தப்பிய கும்பல்

காரில் சென்ற டாக்டரை கடத்தி பணம், நகை பறித்து தப்பிய கும்பல்

அரூர், அரூர் அருகே, காரில் சென்ற ஹோமியோபதி டாக்டரை கடத்தி பணம், நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன், 37. ஹோமியோபதி டாக்டர்.இவர், தென்கரைக்கோட்டையில், சண்முகா மெடிக்கல் மற்றும் மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு மணிவண்ணன் மருத்துவமனையை மூடிவிட்டு, அனுமன்தீர்த்தத்தை சேர்ந்த தனது நண்பர் பஷீர் என்பவருடைய கியா காரில், தென்கரைகோட்டையில் இருந்து வேப்பிலைப்பட்டிக்கு சென்றார்.தென்கரைக்கோட்டை நாயக்கர் தெரு பாரத் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, 25 வயது மதிக்கத்தக்க மூன்று வாலிபர்கள் காரை நிறுத்தி, தங்களது ஸ்கூட்டி டயர் பஞ்சர் ஆகியுள்ளது எனக் கூறியுள்ளனர். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய மணிவண்ணனை, மூன்று பேரும் கத்தியை காட்டி மிரட்டி காரில் ஏற்றிக்கொண்டு, வாணியாறு அணை மற்றும் சேலம் மாவட்டம், டேனிஸ்பேட்டை வரை அழைத்து சென்றுள்ளனர்.அப்போது மணிவண்ணனிடம் இருந்து, 40,000 ரூபாய் மற்றும் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து பே.டி.எம்., ஆன்லைன் பரிவர்த்தனை மூலம், 13,000 ரூபாய் அவர் கழுத்தில் அணிந்திருந்த, இரண்டரை பவுன் தங்க செயினை பறித்துள்ளனர். தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் உன்னுடைய குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என மணிவண்ணனை மிரட்டியுள்ளனர். பின் அதிகாலை, 4:00 மணிக்கு மணிவண்ணனை கடத்திய அதே இடத்திற்கு வந்து காரையும், அவரையும் விட்டுச் சென்றுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து, கோபிநாதம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !