நல்லம்பள்ளி, காரிமங்கலத்தில் ரூ.3.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி: நல்லம்பள்ளி மற்றும் காரிமங்கலம் வாரச்சந்தையில் தீபாவளியை முன்னிட்டு, 3.50 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையாகின.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வார செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலையில் ஆட்டுச்சந்தை கூடியது.இங்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், ஆடுகளை விற்கவும், வாங்கவும் வந்திருந்தனர். நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்றைய சந்தைக்கு, 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளின் எடைக்கு ஏற்ப, 4,000 முதல், 30,000 ரூபாய் வரை விற்பனையானது. ஆடுகள் வரத்து அதிகரிப்பால் சந்தையில், 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.அதேபோல், காரிமங்கலம் வாரச்சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட, 700க்கும் மேற்பட்ட ஆடுகள், 1.50 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையானது. அதன்படி, நல்லம்பள்ளி மற்றும் காரிமங்கலம் வாரச்சந்தைகளில், 3.50 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.