கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான வக்கீல் பிசியோதெரபி சிகிச்சைக்காக பெங்களூரு அனுப்பி வைப்பு
ஓசூர், டிச. 15-ஓசூரில், கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான வக்கீல் கண்ணன், 24 நாள் சிகிச்சையளித்து காப்பாற்றப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் சென்டருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ரங்கசாமிபிள்ளை தெருவை சேர்ந்தவர் கண்ணன், 30, வக்கீல்; இவர் கடந்த மாதம், 20 மதியம், 1:00 மணிக்கு நீதிமன்ற பணிகளை முடித்து, அலுவலகத்திற்கு நடந்து சென்றார். அப்போது, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ஓசூர் நாமல்பேட்டையை சேர்ந்த வக்கீல் குமாஸ்தா ஆனந்தகுமார், 39, என்பவர் வக்கீல் கண்ணனை அரிவாளால் தாக்கினார். டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, ஆனந்தகுமார், அவரது மனைவி வக்கீல் சத்தியவதி, 33, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய வக்கீல் கண்ணன், சரியான நேரத்தில் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 24 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டு, அவரது உயிரை டாக்டர்கள் காப்பாற்றினர். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது.இந்நிலையில், நேற்று அதிகாலை பெங்களூருவில் உள்ள தனியார் ரீஹாப் சென்டருக்கு வக்கீல் கண்ணன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பழைய நினைவுகள் வருவதற்கும், பேச்சு மற்றும் நடப்பதற்கு பயிற்சி மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.