தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி, தர்மபுரியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், தொழுநோய் கண்டுபிடிப்பு பணி மற்றும் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று தொடங்கி வைத்தார்.பஸ் ஸ்டாண்ட் முதல், மாவட்ட மைய நுாலகம் வரை நடந்த விழிப்புணர்வு பேரணியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, தொழுநோய் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.தொழுநோய் ஒழிப்பு குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டத்தில், தேசிய தொழுநோய் திட்டம் மூலம் மத்திய, மாநில அரசுகளால் தொழுநோய் நோய்தாக்க விகிதம், குழந்தை தொழுநோயாளிகள், ஊனமுற்ற தொழுநோயாளிகள் மற்றும் குறைந்த நோய் பரவல் உள்ள பகுதிகளில் ஆக., 1 முதல், 20 வரை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில், 225 தன்னார்வளர்கள் கொண்ட குழுக்கள் மூலம், வீடு வீடாக சென்று, தொழுநோய் கண்டுபிடிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். தொழுநோய் சிகிச்சை, பரிசோதனை, ஆலோசனைகள் அனைத்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.இதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் பூபேஸ், அரசு தர்மபுரி மருத்துவக்கல்லுாரி டீன் (பொ) சிவக்குமார், நகராட்சி சேர்மன் லட்சுமி, துணை இயக்குனர் (தொழுநோய்) புவனேஸ்வரி, நகராட்சி கமிஷ்னர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.