உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர் சேர்க்கையில்லை: கோட்டூர் மலை அரசு பள்ளி மூடல்

மாணவர் சேர்க்கையில்லை: கோட்டூர் மலை அரசு பள்ளி மூடல்

மாணவர் சேர்க்கையில்லை: கோட்டூர் மலை அரசு பள்ளி மூடல்பென்னாகரம், நவ. 7-தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, வட்டுவனஹள்ளி பஞ்.,ல் கோட்டூர் மலை உள்ளது. இது, மலை அடிவாரத்தில் இருந்து, 6 கி.மீ., கரடு முரடான பாதையை கடந்து சென்றால், கோட்டூர் மலையை அடையலாம். இங்கு, 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் விளை பொருட்களை விற்க மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல, கழுதைகளை பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த, 70 ஆண்டுகளாக சாலை வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லை. 2 வருடத்திற்கு முன், பொதுமக்கள் ஒன்றிணைந்து, வனத்துறையிடம் அனுமதி பெற்று, 6 கி.மீ., துாரத்திற்கு மண் சாலை அமைத்தோம்.அச்சாலை வழியாக, டிராக்டர் மட்டும் சென்று வருகிறது. இதில், மழைக்காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டால், சாலை மிகவும் மோசமடையும். இதனால், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளி வர மதியம், 12:00 மணியாகிறது. பின் மாலை, 3:00 மணிக்கு சென்று விடுகின்றனர். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வராததால், மாணவர்கள் பள்ளி செல்வதில்லை. இதனால், கடந்த ஜூன் மாதம் பள்ளி மூடப்பட்டது. தார்ச்சாலை வசதி கேட்டு, கடந்த லோக்சபா தேர்தலை புறக்கணித்தோம். அரசு அதிகாரிகள் வந்து, சாலை அமைத்து தருவதாக உறுதி கூறி ஓட்டளிக்க கூறினர். தேர்தல் முடிந்து, 6 மாதமாகியும் இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரியும், எங்களை திரும்பி கூட பார்க்கவில்லை. இவ்வாறு கூறினர்.இது குறித்து, பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் கூறுகையில்,''வட்டுவனஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 3 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். 2022ல், 12 மாணவர்கள் இருந்த நிலையில், நடப்பாண்டில், 3 மாணவர்கள் மட்டும் வந்தனர். அவர்களும் பாதியில் வேறு பள்ளிக்கு சென்று விட்டதால், கடந்த ஜூன் மாதம் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதில், பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மீண்டும் மாணவர்கள் வந்தால், பள்ளியை திறக்க தயாராக உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ