உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மணியம்பாடியில் 12.97 லட்சம் ரூபாய் இழப்பு திருப்பி கட்ட மாஜி பஞ்., தலைவருக்கு நோட்டீஸ்

மணியம்பாடியில் 12.97 லட்சம் ரூபாய் இழப்பு திருப்பி கட்ட மாஜி பஞ்., தலைவருக்கு நோட்டீஸ்

கடத்துார் : கடத்துார் அடுத்த மணியம்பாடி ஊராட்சியில், 12.97 லட்சம் ரூபாய் ஊராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் தலைவருக்கு, தணிக்கை துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியம், மணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த மஞ்சுளா சரவணன் கடந்த, 5 ஆண்டுகளாக இருந்து வந்தார். இவரது பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள், நிதி இழப்பீடு செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., -கோவிந்தசாமி, அந்த ஊராட்சியை சேர்ந்த மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, கலெக்டர் உத்தரவின் படி, மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை) நாகராஜன் தலைமையில், அதிகாரிகள் கடந்த டிச.,23ல் ஊராட்சியின் கணக்குகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டனர். இதில் தெரு விளக்கு வாங்கியது மற்றும் பராமரிப்பு செலவினம், சுகாதார செலவு மேற்கொண்டது, குடிநீர் உபகரணங்கள் வாங்கியது, செலவு சீட்டுகள், ஏதுமின்றி மற்றும் ரொக்க புத்தகத்தில் பதிவுகள் ஏதும் இல்லாமல் செலவினம் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது.இதில் அரசால் அனுமதிக்கப்பட்ட செலவுத் தொகை, 4.36 லட்சம் ரூபாய். ஆனால் அரசின் அனுமதி இன்றி செலவிடப்பட்ட தொகை, 17.33 லட்சம் ரூபாய். இதனால் ஊராட்சிக்கு, 12.97 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.ஆகவே, இழப்பு தொகைக்கு முறையான ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது இழப்பீடுதொகை, 12 லட்சத்து 97 ஆயிரத்து, 496ஐ ஊராட்சி கணக்கில் செலுத்தி ஈடு செய்ய வேண்டும் என தி.மு.க., மாஜி. பஞ்., தலைவர் மஞ்சுளாவுக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ