அரசு பள்ளி மாணவர்கள் தகவல் விற்பனை பெற்றோர் பரபர குற்றச்சாட்டு
தர்மபுரி, டிச. 24-தர்மபுரி மாவட்டத்தில், அரசு பள்ளிகள் 232, தனியார் பள்ளிகள், 91 என, 323 பள்ளிகள் உள்ளன. இதில், 10ம் வகுப்பில், 20,014 மாணவர்கள், பிளஸ் 2 வில், 18,975 மாணவர்கள் படிக்கின்றனர்.மாணவர்களின் பெற்றோர், தங்களின் மொபைல் எண் மற்றும் மாணவர்களின் இ - மெயில் ஐடி உள்ளிட்ட தகவல்களை பள்ளியில் வழங்கி உள்ளனர். அந்த மொபைல் எண்களுக்கு, பல கல்லுாரிகள் மற்றும் கோச்சிங் சென்டரில் இருந்து அட்மிஷன் தொடர்பாக, தினமும் தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, ஒரு மாணவனின் தந்தை கூறுகையில், ''தர்மபுரி அரசு பள்ளியில், என் மகன் பிளஸ் 2 படிக்கிறார். அரசு பணியிலுள்ள நான், பர்சனல் மொபைல் எண்ணை, என் மகன் படிக்கும் பள்ளியில் கொடுத்திருந்தேன். இதில், கடந்த ஒரு மாதமாக சேலம், நாமக்கல், கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதி, தனியார் கல்லுாரிகள், நீட் கோச்சிங் சென்டர்கள் உள்ளிட்டவற்றில் இருந்து அட்மிஷன் போட கேட்டு பேசி வருகின்றனர். அப்போது, என் பெயர், என் மகன் மற்றும் படிக்கும் பள்ளி முதற்கொண்டு அனைத்து தகவலையும் சரியாக கூறுகின்றனர். விருப்பமில்லை என தொடர்பை துண்டித்தாலும், மறுநாள், மற்றொரு எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு தொல்லை தருகின்றனர். தனிப்பட்ட முறையில் நான் வைத்திருந்த மொபைல் எண்ணை, பள்ளிக்கு மட்டும் வழங்கிய நிலையில், அது விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது,'' என்றார்.இது குறித்து, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திராவிடம் கேட்டபோது, ''10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் என்னிடமும், சம்மந்தப்பட்ட அரசு பள்ளிகள், ஏ.பி.ஓ., சூப்பிரண்டு மற்றும் சென்னை பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் மட்டும் தான் உள்ளது. மாவட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளிகளில், இந்த டேட்டாவை மற்ற தகவல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பில்லை. இதுவரை, அது போன்ற புகாரும் வந்ததில்லை. இருப்பினும் விசாரிக்கிறோம்,'' என்றார்.