நீர் வழிபாதை, சாலை ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் மனு
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பட்டுகோணாம்பட்டியை சேர்ந்த மக்கள், நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் (பொ) ராதாகிருஷ்ணனிடம், ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு கொடுத்தனர்.அதில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோணாம்பட்டியில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தங்கள் அத்தியாவசிய தேவைக்காக பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சேலம் செல்ல சாமியாபுரம் கூட்ரோடு வந்து செல்ல வேண்டும். சாமியாபுரம் கூட்ரோடு பிரிவு சாலை அருகே வரும்போது, நெடுஞ்சாலை ஓரம், மற்றும் நீர் வழிபாதையை ஆக்கிரமிப்பு செய்து வழிபாட்டு தலங்கள் மற்றும் கட்டடங்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கட்டியுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு உள்ளது.இது குறித்து, அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில், டிராக்டரில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மண் கொட்டி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தனர். இதை கேட்ட பட்டுகோணாம்பட்டி பகுதி மக்களுக்கும், ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினர். ஆகவே சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே, ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அகற்றி பதற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.