தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த மணிபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், 75. தானிய வியாபாரி. இவர் கடந்த, இரு தினங்களுக்கு முன் மாலையில், வியாபாரம் சம்பந்தமாக பொம்மிடி பஸ் ஸ்டாண்ட் வந்தார்.அப்போது கீழே கிடந்த பர்ஸ்சை எடுத்து பார்த்தபோது அதில், 15,580 ரூபாய் இருந்தது. பணத்தை தேடி யாராவது வருகிறார்-களா என, லட்சுமணன் சிறிது நேரம் அங்கே பார்த்தார். யாரும் வராததால், பஸ் ஸ்டாண்டிலுள்ள, கடைகாரர்களிடம், யாராவது வந்து, பணத்தை தேடினால் தன்னிடம் உள்ளதாகவும், போலீசில் ஒப்படைக்க போவதாகவும், தன் மொபைல்போன் நம்-பரை அவர்களிடம் கொடுத்து சென்றார்.இந்நிலையில் பில்பருத்தி பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி சத்யா, 40. கோவையில் இருந்து வந்த தன் மகன், மகளை அழைத்து செல்ல பஸ் ஸ்டாண்டிற்கு வரும்போது பணத்தை தவற விட்டது தெரிந்தது. பஸ் ஸ்டாண்டில் கடை வைத்துள்ள வியாபாரி துரை, சத்யாவை அழைத்து விபரங்கள் கேட்டறிந்தார். தன் மகன்களுக்கு கல்லுாரி கட்ட பணம் வைத்திருந்ததும், அது தொலைந்து விட்டது என சத்யா கூறினார். அதன் பிறகு அவர், லட்சுமணனை வரவழைத்து பொதுமக்கள் முன்னிலையில், 15,580 ரூபாயை சத்யாவிடம், லட்சுமணன் ஒப்படைத்தார். கீழே கிடந்த பணத்தை எடுத்து பாதுகாப்பாக வைத்து, உரியவரிடம் வழங்கிய நேர்மையான வியாபாரி லட்சுமணனை பொது-மக்கள் பாராட்டினர்.