தொப்பூர் கணவாயில் விபத்தை கட்டுப்படுத்த கனரக, இலகு ரக வாகனங்களுக்கு தனிப்பாதை
தர்மபுரி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரியை இணைக்கக்கூடிய, மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே, பாளையம் சுங்கச்சாவடி வழியாக செல்கிறது. இதன் வழியே நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. தொப்பூர் கணவாய் வனப்பகுதி, 8 கி.மீ., சாலையில், கட்டமேடு முதல் போலீஸ் கோட்ரஸ் வரையிலான, 3 கி.மீ., சாலையில் அதிக விபத்து நடக்கிறது. இதை கட்டுப்படுத்த, தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி நிறுவனம் இணைந்து, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.அதன்படி, தொப்பூர் கணவாய் பகுதியில், 6.60 கி.மீ., உயர்மட்ட சாலை அமைக்க, மத்திய அரசு, 775 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டுள்ளது. மேம்பால பணிகளை முடிக்க, 3 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதுவரை, தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில், அதிக விபத்து ஏற்படும் இடங்களில், கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களை தனித்தனியாக பிரித்து அனுப்ப, சோதனை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வெள்ளக்கல்லில் இருந்து கட்டமேடு வரை, 3.50 கி.மீ., இடதுபுறம் கனரக வாகனங்கள், வலது புறம் கார் உட்பட இலகுரக வாகனங்கள் செல்ல சாலை நடுவே, பிளாஸ்டிக் தடுப்புகள் பொருத்தி தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியின் ஆலோசனைப்படி, வாகனங்களுக்கான தனிப்பாதையை மேலும் ஒரு கி.மீ., நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதை, நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார் நேற்று ஆய்வு செய்து, பாளையம் சுங்கச்சாவடி சாலை பாதுகாப்பு மேலாளர் ஞானசேகரனிடம் கேட்டறிந்தார். மேலும், இன்று செப்., 27ல் சோதனை அடிப்படையில், பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை, தனித்தனி பாதையில் செல்ல அனுமதிக்கப்படும். இதனால், ஓவர்டேக் செய்யும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை தடுப்பதுடன், கனரக வாகனங்களை மிதமான வாகனத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சாலை பராமரிப்பு குழுவினர் தெரிவித்தனர்.