தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி
நல்லம்பள்ளி, நல்லம்பள்ளி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கக்கோரி, 4 கிராம மக்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, சர்வீஸ் சாலையில் வேகத்தடைகள் அமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள சேசம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில், எதிர் திசையில் செல்லும் வாகனங்களால், ஏற்படும் விபத்தை தடுக்க, உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி, 4 கிராம மக்கள் குடிப்பட்டி பாலம் அருகே, இரண்டு நாட்களுக்கு முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பாளையம் சுங்கச்சாவடி திட்டத்தலைவர் நரேஷ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உயர்மட்ட பாலம் அமைக்கும் கோரிக்கை குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இந்நிலையில், சேசம்பட்டி பஸ் ஸ்டாப் முதல், குடிபட்டி பாலம் வரையிலான சர்வீஸ் சாலையில் விபத்தை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 500 மீட்டர் நீள சர்வீஸ் சாலையில், 5 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கும் பணியில், பாளையம் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டனர்.