தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநாடு
பாப்பிரெட்டிப்பட்டி:தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின், பாப்பிரெட்டிப்பட்டி வட்ட, 3வது மாநாடு பாப்பிரெட்டிப்பட்டியில், வட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் அம்புரோஸ், மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா, சங்க வட்ட தலைவர் தீர்த்தகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வட்டக்குழு உறுப்பினர் மணிவண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் நொனங்கனுார், ஆலமரத்துாரில் பழங்குடி மக்களின் சுடுகாடு மற்றும் வழிப்பாதை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மோட்டுபட்டி எழுந்து கொட்டப்பட்டி கிராம ஓடை புறம்போக்கை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஓடையாகவும் பாதையாகவும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.ஆவாரங்காட்டு பழங்குடி மக்களுக்கு, வீட்டுமனை பட்டா மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும். வாச்சாத்தி வன்கொடுமையில் தாக்குதலுக்கு உள்ளான அனைத்து பழங்குடி குடும்பங்களுக்கும், அரசு வீடு நிலப்பட்டா, சுய வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மானியத்துடன் தொழில் கடன் ஆகியவை வழங்க வேண்டும். வாணியாறு அணைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு ஜாதி சான்றை, காலம் கடத்தாமல் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் மல்லையன் நன்றி கூறினார்.