டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதை அகற்றக்கோரி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மற்றும் அப்பகுதி மக்கள், கடந்த செப்., 27ல் கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்குள் கடையை மாற்றி விடுவதாக, அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, கதிரிபுரத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஊர் தலைவர் ராஜி தலைமையில் நேற்று கதிரிபுரம் விழுதிப்பட்டி ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த, பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி உள்ளிட்ட பா.ம.க.,வினரும், டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் பொம்மிடி போலீசார், கடை வைக்கப்படாது என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.