/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர்களுக்கு ரூ.13,000 மதிப்பில் புத்தகம் வாங்கி கொடுத்த ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு ரூ.13,000 மதிப்பில் புத்தகம் வாங்கி கொடுத்த ஆசிரியர்கள்
கம்பைநல்லுார், :தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெலவள்ளியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தர்மபுரியில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவிற்கு இப்பள்ளி மாணவ, மாணவியரை, ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு, அரங்குகளில் இருந்த பல்வேறு தலைவர்களின் வரலாறு அடங்கிய புத்தகங்கள், திருக்குறள், பொது அறிவு, ஆங்கில அகராதி, நன்னெறி கதைகள் போன்ற புத்தகங்களை மாணவ, மாணவியர் வாங்கினர். அவற்றிற்கு உண்டான மொத்த தொகையான, 13,000 ரூபாயை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வழங்கினர். மேலும், ஒவ்வொரு மாணவருக்கும், தலா, ஒரு உண்டியல் மற்றும் ஒரு மரக்கன்று, புத்தக திருவிழா சார்பில் வழங்கப்பட்டது. அவற்றை மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் பெற்று வீடு திரும்பினர்.