உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆசிரியையிடம் ரூ.10,000 லஞ்சம் பாலக்கோடு கருவூல அதிகாரி கைது

ஆசிரியையிடம் ரூ.10,000 லஞ்சம் பாலக்கோடு கருவூல அதிகாரி கைது

பாலக்கோடு:ஓய்வூதிய பலன்களை பெற ஓய்வுபெற்ற ஆசிரியையிடம், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பாலக்கோடு கருவூல அதிகாரியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அல்ராஜீ கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கவிதா, 50. இவர் சிக்கார்த்தனஹள்ளி அரசு நடுநிலைபள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த, 2 ஆண்டுக்கு முன், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால், பணி செய்ய முடியாத சூழலில், விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவருக்கு சேர வேண்டிய பண பலன்கள், 29.50 லட்சம் ரூபாய் பெற முயற்சி செய்து வந்தார். இதற்கு, கல்வித்துறை அனுமதி வழங்கிய நிலையில், பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில், இதற்கான அனுமதியை வழங்காமல், இழுத்தடித்து வந்தனர். இது குறித்து, பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில், கூடுதல் சார்நிலை கருவூல அலுவலராக பணியாற்றி வந்த, திருமல்வாடியை சேர்ந்த ராமசந்திரன், 42, என்பவரிடம், கவிதா கேட்டபோது, 10,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான், அனுமதி தர முடியும் என கூறியுள்ளார். லஞ்சம் தர விரும்பாத கவிதா, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜனிடம் புகார் அளித்தார்.நேற்று, லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கவிதாவிடம் கொடுத்தனுப்பினர். நேற்று மதியம், 3:00 மணிக்கு கவிதா, லஞ்ச பணத்தை, கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் ராமசந்திரனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நாகராஜ், இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், ராமசந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி