சுங்கச்சாவடியில் கட்டணம் வாங்கியதால் த.வெ.க., தொண்டர்கள் சாலை மறியல்
பாலக்கோடு, த.வெ.க., மாநாட்டிற்கு சென்று வந்த வாகனங்களுக்கு, சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலித்ததால், 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, கர்த்தாரஹள்ளியில் சுங்கச்சாவடி புதியதாக தொடங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் த.வெ.க., மாநாட்டுக்கு சென்று வந்த வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துள்ளனர். இதனால் பாலக்கோடு ஒன்றிய செயலர் குமார் தலைமையில் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் மதுரை பாரபத்தியில் நடந்த, த.வெ.க-., மாநில மாநாட்டிற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மினி வேன், கார், டிராவல்ஸ் வேன், தனியார் பஸ்களில் கட்சியினர் சென்று வந்தனர்.மாநாட்டு வாகனங்களுக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்ட போதிலும், பாலக்கோடு அருகே உள்ள கர்த்தாரஹள்ளி சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிக்காமல், வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்ததால், 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சுங்கச்சாவடியை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து வசூலித்த சுங்க கட்டணத்தை திரும்ப செலுத்துவதாக, சுங்கச்சாவடி நிர்வாகம் உறுதியளித்ததின்பேரில், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.