பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தல்
அரூர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட, 13வது மாநாடு நேற்று முன்தினம் அரூரில் துவங்கியது. மாலை, 4:00 மணிக்கு, அரூர் பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி கச்சேரிமேட்டில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்கு மாவட்ட தலைவர் ஜெயா தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அகில இந்திய துணைத்தலைவர் சுகந்தி, மாநில பொதுச்செயலாளர் ராதிகா, மாநில செயற்குழு உறுப்பினர் பவித்ரா தேவி, மாவட்ட செயலாளர் மல்லிகா ஆகியோர் பேசினர்.2வது நாளான நேற்று, அரூர் ராயல் பார்ட்டி ஹாலில் பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயா, மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் தமிழ்மணி ஆகியோர் தலைமை வகித்தனர். அகில இந்திய துணைத்தலைவர் சுகந்தி துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில், தமிழத்தில் பரவலாக நடந்து வரும் ஜாதி, ஆணவ படுகொலைகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் வழக்குகளில், குற்றவாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு நிதி வழங்கி பாதுகாக்க வேண்டும். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை சிறப்பு பிரிவுகள் துவங்கி, அனைத்து நவீன மருத்துவ கருவிகளுடன் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் நடக்கும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க காவல்துறை, குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகளில் புகார் கொடுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களை, காவல்துறை அதிகாரிகள் கனிவுடனும், கண்ணியத்துடனும் அணுகி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.