பள்ளிகளில் 3,000 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலி தற்காலிக நியமனத்துக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட உடற்கல்வி பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை தற்காலிக அடிப்படையில் நியமிக்க அனுமதிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில், அரசு உயர்நிலை, மேல்நிலை என, 6,254 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 5,777 பள்ளிகளில் தான் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அதில், 700க்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில், ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம், அதற்கு மேல் மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில், இரு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆனால், 2021க்கு பின், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, 3,000க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்ட கூட, பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.இந்நிலையில், 'சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள, 141 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, மாநகராட்சி சார்பில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும்' என, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், குறைந்தபட்சம் தொகுப்பூதியத்தில் ஆட்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களை புத்துணர்வுடன் கற்பித்தலில் கவனம் செலுத்த, விளையாட்டுக்கு என, நேரம் ஒதுக்கப்படுகிறது. உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால், விளையாட்டு விதிமுறைகளை கற்றுத்தரவோ, மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கவோ முடியாத சூழல் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், நிரந்தர உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க, நீண்ட காலம் ஏற்படுகிறது.கடந்த மாதம், பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களை, பள்ளி மேலாண் குழு மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள, பள்ளி கல்வித்துறை அனுமதி, நிதி வழங்கியுள்ளது. அதேபோல் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும், பள்ளி மேலாண் குழு மூலம் நிரப்ப அனுமதிக்க வேண்டும். விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.நமது நிருபர்