உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்தர்மபுரி, செப். 8- தர்மபுரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு அபிஷேக, பூஜைகளும், பக்தர்கள் தங்கள் பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்தும் வழிபாடு நடத்தினர்.விநாயகர் சதுர்த்தி, நேற்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில், தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு சந்தனம், பால், இளநீர், விபூதி, மஞ்சள், தயிர், தேன் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மஹா தீபாராதனையை தொடர்ந்து, வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்தார். இதில், அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து, அருகம்புல், எருக்கம் பூ மாலை உள்ளிட்டவைகளை சுவாமிக்கு சாற்றி வழிபட்டனர். கோவில் முழுவதும் பூ அலங்காரம் மற்றும் தோரணம் அமைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரித்திருந்தனர். அப்பாவு நகர் கற்பக விநாயகர் கோவிலில், வெள்ளிக்கவச அலங்காரத்தில் கற்பக விநாயகரும், குமாரசாமிபேட்டையில், செல்வகணபதி தங்கக்கவச அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் தெருவில், விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில், 22ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், விநாயகருக்கு பூஜை செய்து, விழாவை தொடங்கி வைத்தார். தர்மபுரி அடுத்த ஆட்டுகாரம்பட்டியில், அப்பகுதி இளைஞர்கள் வனப்பகுதி போல் குடில் அமைத்து, அதில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், மாவட்டத்தில், 13 இடங்களில் சிலை வைத்து வழிபாடுகள் நடந்தன. இதில், பென்னாகரம் மெயின் ரோடு, மேம்பாலம் அருகில், மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இந்து முன்னணி சார்பில், 60 இடங்களில் சிலை வைக்கப்பட்டன. இதில், பிடமனேரி சாலை அருகே, விநாயகர் சிலை வைத்து வழிபாடுகள் நடந்தன. தர்மபுரி மாவட்டம் முழுவதும், 1,341 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு சிலை வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். பக்தர்களின் நலன் கருதி, ஒகேனக்கல் காவிரியாறு மற்றும் இருமத்துார் தென்பெண்ணையாறு ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.* அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, மொரப்பூர், கம்பைநல்லுார், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 370க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு விழாக்குழுவினர் சிறப்பு பூஜை செய்தனர். மேலும் வீடுகளில் விநாயகருக்கு பிடித்த அவல், சுண்டல், பொரி, கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.அதேபோல், அதிகாலை முதல் கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அருகம்புல், எருக்கம் பூமாலை கொண்டு வந்து சுவாமிக்கு சாற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை