வடகிழக்கு பருவ மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக, கனமழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள அணைகள் மட்டுமின்றி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 74 ஏரிகளில், 11 ஏரிகளும்; ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 546 ஏரிகளில், 126 ஏரிகளும்; 504 குளங்களில், 57 குளங்களும் நிரம்பின.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து, நடப்பாண்டில், பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், வடகிழக்கு பருவமழை காலத்தில் முழு கொள்ளளவை எட்டிய இந்த அணைகளில் இருந்து நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. அதேபோல், பிரதான ஏரி, குளங்களில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏரி, குளங்களிலும் நீர்மட்டம் சரிந்தது.இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த, மே மற்றும் நடப்பு ஜூன் மாதத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை கூடுதலாக மழை பெய்தது. மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழைப்பொழிவான, 853 மி.மீ.,ல் ஜூன், 25 வரை, 272 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்து பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி சின்னாறு அணை நீர்மட்டம், 47.95 அடி, கேசர் குளி அணை, 16.40, நாகாவதி அணை, 19.94, தொப்பையாறு அணை, 37.72, வரட்டாறு அணை, 27.81, வாணியாறு அணை, 57.90, தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட தும்பலஹள்ளி அணை, 6.56 அடியாகவும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.