உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காவிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து பாறை ஓவியம்

காவிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து பாறை ஓவியம்

பென்னாகரம்: பென்னாகரம் நாகமரை காவிரி ஆற்றங்கரை அருகில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய, வெண்சாந்து பாறை ஓவியம் கண்டறியப்பட்டது. தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், நாகமரை காவிரி ஆற்றுப்படுகை மணிக்காரன் கொட்டகையை அடுத்த பூதிகுண்டில், பெருங் கற்கால பாறை ஓவியங்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து, பென்னாகரம் வரலாறு மைய ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள் தலைமையில், அப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி பாறையில், பெருங்கற்கால வெண்சாந்து ஓவியம் இருப்பது கண்டறியப்பட்டது. சமவெளியில் குன்றில் இயற்கையாக அமைந்த குகையின் மேற்பகுதியில் வரையப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட தொல்லியல் அலுவலர் பரந்தாமன் கூறுகையில், ''பெருங்கற்காலத்தை சார்ந்த இந்த வெண்சாந்து பாறை ஓவியம், 2,500 முதல், 3,500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கலாம். ''இங்குள்ள நான்கு ஓவியங்களில், இரண்டு ஓவியங்கள் பெரிதாக உள்ளன. இறந்து போன இனக்குழு தலைவனை வணங்குவதற்காக வரையப்பட்டிருக்கலாம். மற்ற இரண்டு ஓவியங்கள் சிறிய அளவில் தட்டையாக உள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை