மகளிர் குழு தயாரிப்புகள் சந்தைப்படுத்தல்
தர்மபுரி, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி அரங்கத்தில், மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் பொருட்களை, மகளிர் திட்டம் மூலம், சந்தைப்படுத்தும் நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் சதீஷ் நேற்று தொடங்கி வைத்தார். விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டு, தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடு குறித்து, மகளிர் சுய உதவி குழுவினரிடம் கேட்டறிந்தார்.இது குறித்து, மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த, உமா கூறியதாவது: மகளிர் குழுக்கள் மூலம், குப்பைமேனி சோப்பு, நலங்கு மாவு சோப்பு, பேர்னஸ் கிரீம், சிறுதானிய இனிப்பு வகைகள், கைத்தறி பொருட்கள் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கூடிய வெள்ளரி, நாவல், பாகற்காய் ஜூஸ்கள் தயாரித்து, விற்பனை செய்கிறோம். இவற்றை ஆன்லைனில் விற்பனை செய்தால், தயாரிப்பு ஒரு குழுவுக்கு மட்டும் வருவாய் கிடைக்கும். அதே சமயம், மகளிர் குழுக்கள், மகளிர் திட்டத்தில் உள்ள பெண்களை உறுப்பினராக இணைத்து, அவர்கள் மூலம், விற்பனை செய்வதின் மூலம், பல பெண்களுக்கு வருவாய் கிடைக்கிறது. எனவே, ஆன்லைன் விற்பனையை தவிர்க்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இதில், மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, ஆர்.ஏ.சி.ஐ., இயக்குனர் கவுரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.