பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட 34 கடைகளுக்கான ஏலம் இன்று நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட 34 கடைகளுக்கான ஏலம் 2021 ல் நடத்தப்பட்டது. கடையை ஏலம் எடுத்தவருக்கு கடை ஒதுக்காமல் மற்றொரு நபருக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து ஏலம் நடத்தப்பட்ட விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என பா.ஜ., கவுன்சிலர் தனபாலன் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.ஓராண்டுக்கான வாடகை முன் வைப்புத் தொகை செலுத்தாத காரணத்தினால் ஏலம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 34 கடைகளுக்கும் 2 வது முறையாக ஏலம் நடத்தப்பட்டதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஏலம் வெளிப்படையாக நடத்தவில்லை என கூறி அ.தி.மு.க.,, பா.ஜ., கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.இதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் பா.ஜ., கவுன்சிலர் தனபாலன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதில் வழங்கப்பட்ட தீர்ப்பில பழைய ஏலத்தை ரத்து செய்து புதிதாக ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கடைகளுக்கான மறு ஏல ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஏலம் நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.