வீடுகள் போல் காட்டேஜ்களுக்கு மின் இணைப்பு ரூ.லட்சக்கணக்கில் வரி இழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் வீடுகளுக்கு வழங்கப்படுவது போல் புதிதாக உதிக்கும் காட்டேஜ்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படுவதால் அரசுக்கு ரூ.லட்சக்கணக்கில் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் அருகே 20 கிலோ மீட்டர் துாரத்தில் சிறுமலை உள்ளது. இங்கு கொடைக்கானல் சீதோஷ்ண நிலை போல் இருக்கும். இதை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிடுகின்றனர். இதை கருத்தில் கொண்ட தொழிலதிபர்கள் பலர் இங்குள்ள மலை பகுதிகளில் காட்டேஜ்களை கட்டுகின்றனர். வீடுகளுக்கான மின் இணைப்பு போன்று விண்ணப்பித்து அனுமதியை பெறுகின்றனர். இதற்கு மின்வாரிய அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இதனால் அரசுக்கு ரூ.லட்சக்கணக்கில் வரி இழப்பு ஏற்படுகிறது. இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு புதிதாக உருவெடுத்துள்ள காட்டேஜ்களில் ஆய்வு செய்து மின் இணைப்புகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். முறைகேடு நடந்திருந்தால் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.