புரோக்கர்களுக்கே முன்னுரிமை முன்னாள் படைவீரர்கள் புகார்
திண்டுக்கல்: வருவாய்துறை சார்ந்த எந்த விஷயங்களுக்காக சென்றாலும் தாலுகா அலுவலங்களில் புரோக்கரின் தலையீடுகள் அதிகமுள்ளது என முன்னாள் படைவீரர்கள் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்களுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.இதில் பேசிய முன்னாள் படைவீரர்கள், வருவாய்துறை சார்ந்த எந்த விஷயங்களுக்காக சென்றாலும் தாலுகா அலுவலங்களில் நேரடியாக செல்ல முடியவில்லை. புரோக்கரின் தலையீடுகள் தான் அதிகம் உள்ளது. அவர்களின் மூலமாக சென்றால் உடனடியாக வேலைகள் நடக்கிறது என்றனர்.பதிலளித்த கலெக்டர் , பொத்தாம் பொதுவாக சொல்ல வேண்டும். எந்த தாலுகா அலுவலகம் என்பதை வெளிப்படையாக கூறுங்கள் என்றார். தயங்கிய முன்னாள் படைவீரர்கள் பழநி, வத்தலகுண்டு என ஆரம்பித்து மாவட்டம் முழுவதும் வருவாய்துறையில் இவ்வாறுதான் நடக்கிறது என்றனர்.