விழித்துக்கொள்ளுங்கள் மாணவர்களே
-பாலகுருசாமிமுன்னாள் துணைவேந்தர்தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் தார்மீக, நெறிசார்ந்த, அறிவார்ந்த, வலிமையான இளைஞர் சக்தியை உருவாக்கி நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வது தான். எதிர்காலத்தில் நான்காம் தொழிற்புரட்சி சூழலில் உருவாகும் சவால்களை எதிர்கொள்வதற்கான கல்வி தரம், புதுமையாக்கம், ஆய்வு மனப்பான்மை இக்கொள்கையில் உள்ளன.தமிழகத்தில் நிலவுவது போல் இக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும் என்பது இல்லை. அரசியல் சட்டத்தில் அட்டவணையிடப்பட்ட ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்க பரிந்துரை செய்கிறது அவ்வளவுதான்.திராவிட மாடல் அரசு எனக் கூறிக்கொள்ளும் தமிழகத்தில் திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கற்கலாம். இது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தில் 25 சதவீதம் பேர் தெலுங்கு பேசுவோர் உள்ளனர். அதுபோல் கன்னடம், மலையாளம் பேசுவோரும் கணிசமாக வசிக்கின்றனர். மும்மொழித் திட்டம் மூலம் இவர்கள் தங்களது தாய்மொழிகளை கற்க வழிசெய்யும்.மும்மொழித் திட்டத்தின் பாராட்டத் தக்க அம்சங்களில் ஒன்று நாட்டில் உள்ள பல மொழிகள் கொண்ட கட்டமைப்பு சீராக இருப்பதை உறுதி செய்வது ஆகும். பல்வேறு பண்பாடுகள், மொழிகள் இருப்பது நம் நாட்டின் வரப்பிரசாதமாகும். எனவே, பல மொழிகளை கற்பதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். குறுகிய அரசியலுக்காக ஒருவரை குறுக்கிவிடாமல், அவரது அடித்தளத்தை விரிவு செய்யும். வேண்டாம் இரட்டை வேடம்
தமிழ் நீங்கலாக வேறொரு இந்திய மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்வதை 60 ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வரும் ஒரே மாநிலம் தமிழகம். இருமொழிக் கொள்கைகள் போதும் என்பதால் ஏழைகள், கிராமப்புற எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுககுக் கூடுதலாக ஒரு மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதே சமயம் மத்திய அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் சேரும் பணக்கார, நகர்ப்புற மாணவர்கள் தாங்கள் விரும்பும் எந்த மொழியையும் கற்கும் உரிமையை பெறுகிறார்கள். மும்மொழித் திட்டத்தை எதிர்ப்போரின் பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் ஹிந்தியை எவ்வித தடையுமின்றி மகிழ்ச்சியாக கற்கின்றனர் அல்லது கற்றார்கள். அது மட்டுமல்ல, பல தலைவர்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்துகின்றனர் என்பதும் மக்களுக்கு தெரிய வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பேசுவது, தேசிய கல்விக் கொள்கையின் உண்மையான நோக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை அல்லது அரசியல் நோக்கமாக இருக்கலாம். இது மிகவும் வேடிக்கையானது. தமிழக அரசியல் தலைவர்கள், குறிப்பாக புதிய தலைவர்கள் எதையும் தர்க்கப் பார்வையுடன், காரண காரிய அடிப்படையில் அல்லது ஆய்வு நோக்கத்துடன் அணுகுவதில்லை. மக்களை ஏமாளிகளாக்குவதற்கு எளிய வழியை மேற்கொள்கின்றனர். இத்தகைய குறுகிய பார்வையுள்ள தலைவர்கள், கல்வியின் தரத்தை பற்றியோ அல்லது பல்லாயிரம் மாணவர்களின் தேவைக்கான அறிவார்ந்த அணுகுமுறை குறித்தோ கவலைப்படுவதில்லை. எனவே, சுயலாபத்துக்காக 'வாக்கு வங்கி அரசியலில்' ஈடுபடும் இந்த அரசியல்வாதிகளின் மாய்மாலத்துக்கு மக்கள் இரையாகிவிடாதீர்கள். குறிப்பாக மாணவர்கள் விழித்துக்கொள்ளுங்கள்.