தீபாவளி சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி
திண்டுக்கல்; திண்டுக்கல் சீலப்பாடியில் தீபாவளி சீட்டு நடத்தி 65 பேரிடம் ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சீலப்பாடி முள்ளிப்பாடியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி 45. அவரது மனைவி விஜயகுமாரி 43. இவர்கள் முள்ளிப்பாடி, சீலப்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் 2022லிருந்து தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். 2022ல் சீட்டு தொகை வழங்கிய அனைவருக்கும் சரியாக தொகையை வழங்கியுள்ளனர். இந்த நம்பிக்கையில் 2023ல் தீபாவளி சீட்டு தொகையாக இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ரூ.லட்சக்கணக்கில் செலுத்தினர். தீபாவளி நேரத்தில் சீட்டுத்தொகை வழங்காமல் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாயினர். அவர்களிடம் ரூ.35 லட்சம் செலுத்தி ஏமாற்றமடைந்த 65 பேர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.