உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் ஹிந்து முன்னணியினர் உட்பட 40 பேர் கைது

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் ஹிந்து முன்னணியினர் உட்பட 40 பேர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்து சென்ற ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட குடைப்பாறைபட்டியில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி பேணும் வகை கட்சிக்கூட்டம் நடத்த, மத அமைப்புகள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த போலீசார் நிரந்தர தடை விதித்துள்ளனர். இதனால் குடப்பாறைப்பட்டியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய, ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் தடையை மீறி ஹிந்து முன்னணி நகர் தலைவர் ஞானசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள், பெண்கள் குடப்பாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் 3அடி உயர விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். பின் அங்கிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக விநாயகர் சிலை எடுத்து செல்லப்பட்டு வத்தலகுண்டு நெடுஞ்சாலையொட்டி உள்ள கருப்பசாமி கோயில் மைதான விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கு மேற்கு தாசில்தார், வருவாய் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எதிர்ப்பையும் மீறி பூஜைகளை முடித்து சிலையை ஊர்வலமாக எடுத்துச்செல்ல ஹிந்து முன்னணியினர் முயன்றனர். டி.எஸ்.பி., கார்த்திக் தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலையை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், தனி வாகனத்தில் ஏற்றிச்சென்று கோட்டை குளத்தில் கரைத்தனர். தடையை மீறி ஊர்வலம் சென்ற ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோ, 36 பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவத்தையடுத்து குடைப்பாறைபட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ