பள்ளிகளில் காலை உணவு திட்டம்: கூடுதலாக 55,764 மாணவர்கள் பயன்
திண்டுக்கல்:மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் 1,398 பள்ளிகளில் பயிலும் 72 ஆயிரத்து 896 மாணவர்கள் பயனடைந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் படி கூடுதலாக 484 பள்ளிகளில் பயிலும் 55,764 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தை முதல்வர் விஜய் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுாத்து ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இதற்கான விழா நடந்தது. மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்த கலெக்டர் துர்கா, திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலையில் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் 1,398 பள்ளிகளில் 72 ஆயிரத்து 896 மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயனடைந்து வந்தனர். மாநகர, நகர, ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களில் திட்ட விரிவாக்கத்தின் படி அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என 484 பள்ளிகளில் பயிலும் 55,764 மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைகின்றனர். மாவட்டத்தில் முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 1,614 பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 660 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் திட்டம் தொடர்ந்து செயல்பட உள்ளது. நிகழ்ச்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கங்காதாரணி, முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவீந்தரன், மகுடபதி, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ., அய்யனார் தலைமையிலும், வேடசந்துார் ஒன்றியம் மாறம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ., வீராசாமிநாதன் தலைமையிலும், பழநி ஒன்றியம் கோதைமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ., ரவிமனோகரன் தலைமையில் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.