உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரத்து நீர் வர வாய்ப்பின்றி காடாக மாறிய குளம்

வரத்து நீர் வர வாய்ப்பின்றி காடாக மாறிய குளம்

வேடசந்துார்: சேணன்கோட்டை திருமலை கவுண்டர் குளம் வரத்து கால்வாய்களை முறையாக துார்வாராததால் வரத்து நீர் வர வாய்பின்றி குளம் கருவேல மரங்களுடன் காடாக மாறி உள்ளது. நாகம்பட்டி ஊராட்சி சேணன்கோட்டை அருகே உள்ள இக்குளம் ஓரப்பகுதியில் முருங்கை இலை பதப்படுத்தும் கோடவுன் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது . ஊர் அருகே உள்ள இந்த குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகள், போர்வெல்கள் மட்டுமின்றி சேணன்கோட்டை ஊருக்குள் உள்ள போர்வெல்களிலும் போதிய நீர் ஆதாரம் கிடைக்கும். 2021--22 ல் ரூ.13.50 லட்சம் மதிப்பில் குளம் ஆழப்படுத்துதல், கரை பலப்படுத்துதல், புதிய கலிங்கு கட்டுதல் பணிகள் நடைபெற்றுள்ளன. மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது குளம் முழுவதும் கருவேல முட்களால் மூடி கிடக்கின்றன. வரத்து கால்வாயும் முறையாக செப்பனிடாமல் உள்ளதால் மழை காலங்களில் வரும் தண்ணீர் குளத்திற்கு செல்லாமல் காடு தோட்டங்களில் செல்கிறது. திருமலை கவுண்டர் குளம் வரத்து கால்வாய்களை முறையாக தூர்வாரி குளத்திற்கு வரும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும். திசை மாறும் தண்ணீர் வி.நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளர், சேணன்கோட்டை: குளத்தை துார் வாரும்போதே வரத்து வாய்க்காலையும் முறையாக துார்வாரி இருக்க வேண்டும். ஆனால் ஒட்டநாகம்பட்டி வழியாக வரும் இந்த குளத்திற்கான வரத்து கால்வாயை முறையாக துார்வார வில்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீர் குளத்துக்கு செல்லாமல் விவசாய நிலங்களில் மட்டுமன்றி சேணன்கோட்டை ஊருக்குள்ளும் சென்று விடுகிறது. இப்பகுதி மக்களின் நலன் கருதி குளத்தின் உட்பகுதியில் அதிகரித்துள்ள கருவேல முட்களை அகற்றி வரத்து கால்வாய்களை முறையாக துார்வார வேண்டும். பனைமரம் நடுங்க என்.சுரேஷ்குமார், சமூக ஆர்வலர், வேடசந்துார்: ஒட்டநாகம்பட்டி வழியாக வரும் வரத்து கால்வாய்கள் மட்டுமின்றி ஐ.டி.ஐ., வழியாக வரும் காட்டு மேட்டு தண்ணீரும் இந்த குளத்திற்குத்தான் செல்கிறது. குளத்திற்கு வரும் கால்வாய்களை முதலில் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் மழைக்காலத்தில் சிற்றோடை வழியாக வரும் நீர் குளத்தில் தேங்கும். சுற்றுப்பகுதி மக்களும் பயன்பெறுவர். குளத்தின் கரை பகுதி அகலமாக உள்ள நிலையில் மழை நீரால் பாதிப்பு ஏற்படாத வகையில் அதை பாதுகாக்கும் விதமாக பனை விதைகளை நட்டு பனைமர வரிசையை உருவாக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ