உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செம்பட்டி---ஒட்டன்சத்திரம் ரோட்டில் அதிகரிக்கும் விபத்துக்கள்

செம்பட்டி---ஒட்டன்சத்திரம் ரோட்டில் அதிகரிக்கும் விபத்துக்கள்

கன்னிவாடி; மெட்டூர்-பலக்கனுாத்து இடையே 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளபோதும் ரோடு வரை நீட்டித்து ஆக்கிரமிப்பு கடைகள், கட்டடங்களை அமைத்துள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் அலட்சியத்தால் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காமலாபுரம் -பலக்கனுாத்து ரோடு(பழைய, புதிய வழித்தடங்களில் 2 பணிகள்) தடங்களில், நான்கு வழி சாலை,புதிய மேம்பால பணிகள் நடக்கிறது. பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல், காமலாபுரம் தடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. செம்பட்டி, தருமத்துப்பட்டி, கன்னிவாடி தடத்திலான ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இத்தடத்தையும் 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணி 4 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. விரிவாக்க பணியில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைபாதை நடந்தது. இதற்கான பேவர் பிளாக் கற்கள், பல இடங்களில் மேடு பள்ளங்களுடன் உள்ளது. குய்யவநாயக்கன்பட்டி முதல் சோமலிங்கபுரம் வரை பாதயாத்திரை வழித்தடம் பெயரளவில் கூட ஏற்படுத்தவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட ரோடு பெரும்பாலான இடங்களில் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. சென்டர் மீடியனில் பல இடங்களில் எதிரெதிரே தடங்களுக்கான இணைப்பு பகுதி அமைத்துள்ளனர். நுாற்றுக்கணக்கான ரோட்டோர ஓட்டல், டீக்கடை, பழங்கள், இளநீர் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தார் ரோட்டின் விளிம்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ள கடைகளால் சம்பந்தப்பட்ட இடங்களில் போதிய அகலமின்றி நெரிசல், விபத்து ஏற்படுகிறது. சில இடங்களில் கனரக வாகனங்கள் வரும் நிலையில் டூவீலர் ஒதுங்குவதற்கும் இடம் போதுமானதாக இல்லை. பாதயாத்திரை நேரங்களில் ரோடு வரை நாற்காலிகளால் ஆக்கிரமித்துள்ள கடைகளால் பக்தர்கள் தார் ரோட்டில் விபத்து அபாயத்தில் கடக்கின்றனர்.இவற்றை கட்டுப்படுத்த நெடுஞ்சாலை, போலீஸ் துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை இப்பகுதியினர் எதிர்பார்த்துள்ளனர். பணிகளில் பாரபட்சம் ரஜினி, சமூக ஆர்வலர், தர்மத்துப்பட்டி : நாளுக்கு நாள் இத்தடத்தில் கனரக வாகன போக்குவரத்து வெகுவாக அதிகரித்து வருகிறது. ரோடு விரிவாக்கம் செய்தும் பலனில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால் விபத்துக்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. திருப்பூர், கோவை, பொள்ளாச்சிக்கு பூ, காய் கனி ஏற்றிய சரக்கு வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் விபத்து அபாயம் நீடிக்கிறது. செம்பட்டி, ஆத்துார் விலக்கு, பாறைப்பட்டி, தர்மத்துப்பட்டி, காரமடை, கன்னிவாடி, பண்ணைப்பட்டி, ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட முக்கிய கிராமங்களுக்கான சந்திப்பு பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இவற்றை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுகின்றனர். போலீஸ், வருவாய் துறையினரிடம் பல்வேறு அமைப்புகள் மூலம் புகார் செய்த போதும் கண்டுகொள்ள வில்லை. விபத்துக்கள் தாராளம் கே.கணபதி, பா.ஜ., பிற மொழி பிரிவு ஒன்றிய தலைவர், புதுஎட்டமநாயக்கன்பட்டி: குறுகிய திருப்பங்களில் வாகனங்களை எதிர்வரும் வாகனங்களை தெரிந்து கொள்வதற்கான குவி கண்ணாடிகள் பெயரளவில் அமைத்தனர். இவற்றில் பல சேதமடைந்து பல வாரங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. சோமலிங்கபுரம், வெள்ளமடத்த்துப்பட்டி, எட்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் சேதமடைந்து குழிகள் உருவாகி உள்ளன. மழைநீர் செல்ல வழியின்றி தேங்குகிறது. டூவீலர்களில் செல்வோர் மழைநீர், குழிகளால் நிலைதடுமாறுகின்றனர். அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்யாததால் அரைகுறையாக அவசரகதியில் விரிவாக்க பணியை முடித்து விட்டனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ