பருவமழை துவங்கியுள்ளதால் பட்டுப்போன, காய்ந்த மரங்களை அகற்றுங்க..: விபத்து ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
பருவமழை காலம் தொடங்கி விட்டால், ரோட்டோரங்களில் உள்ள மரங்கள் விழுந்து பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழையான மற்றும் பட்டுப்போன மரங்களின் கிளைகள் மற்றும் சிக்னல்கள் மற்றும் கட்டிடங்களில் மாடிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மரம் விழுந்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அதேபோல, சென்டர் மீடியன்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் எப்போது வேண்டுமானலும் மழையோடு பெய்யும் காற்றில் பறந்து விபத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் இருக்கிறது. நகரின் எல்லை மற்றும் முக்கிய கடைவீதிப்பகுதிகளில் கட்டிடங்களில் மாடிகளில் பல அடிகளில் ப்ளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இரும்பு கம்பிகளால் வைக்கப்பட்டுள்ள இந்த ப்ளக்ஸ் போர்டுகள் விழுந்து விடவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, அசம்பாவிதங்கள் நேரும் முன் அதன் உறுதித்தன்மையை சரிபார்த்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொடைக்கானல், சிறுமலை செல்லும் மலைப்பாதைகளில் ரோட்டை ஒட்டி அமைந்துள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட வேண்டும். பட்டுப்போன மரங்களை கண்டறிந்து அதனை முழுமையாக வெட்டிவிடுவது விபத்து ஏற்படுவதிலிருந்து தவிர்க்க உதவும். மாவட்டம் முழுவதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.