பாலம் கட்டித்தாங்க; ஆக்கிரமிப்பை அகற்றுங்க குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் மூலம் மக்கள் முறையீடு
திண்டுக்கல்: பாலம் கட்டித்தர வேண்டும், ஓடை ஆக்கிரமிப்பு, ரேஷன் கடைகளை ஒழுங்கு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் பலரும் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைகுமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 180 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரி, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி கலந்துகொண்டனர்.நத்தம் கணவாய்பட்டி சக்கிலியன் கோட்டை , கொம்புக்கார பாளையம் கிராமங்களை சேர்ந்த மக்கள் தமிழர் தேசம் கட்சினரோடு இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: எங்கள் பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகள் உட்பட மாணவர்கள் பள்ளி செல்வது வரை நத்தம் மெயின் ரோட்டிற்கு வர வேண்டிய சூழல் உள்ளது. வரும் பாதையின் குறுக்கே திருமணித்துத்தாறு ஆறு ஓடுகிறது. இடையே பாலம் இல்லாததால் மழை நேரங்களில் ஆற்றில் இறங்கி வர வேண்டியதாக உள்ளது. ரோடும் மிக மோசமாக உள்ளது. தார்ரோடும், ஆற்றின் குறுக்கே பாலமும் கட்டித் தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.கொசவப்பட்டியை அடுத்த செம்மடைப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனு: செம்மடைப்பட்டியில் உள்ள கல்குத்து ஓடைக்கு தண்ணீர் வரும் நீர்வழிப்பாதையை சிலர் ஆக்கிரத்து தண்ணீர் செல்லாத வகையில் மண்ணை கொட்டி அடைத்துவிட்டனர். இதனால் ஓடைக்கு தண்ணீர் வருவது தடைபட்டுவிட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.மா.கம்யூ., சார்பில் திண்டுக்கல் மாநகர செயலர் அரபுமுகமது தலைமையில் அளிக்கப்பட்ட மனு: ரேஷன் கடைகளில் இருப்பு விவரங்களை பலகையில் எழுதி வைக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களை தவிர வெளியாட்கள் இருப்பதை தடை செய்ய வேண்டும். குறிப்பாக, சவேரியார்பாளையம், சின்னையாபுரம், மதுரைரோடு, நெட்டுத்தெரு, மேட்டுப்பட்டி, பூச்சிநாயக்கன்பட்டி பகுதிகளில் இயங்கி வரும் ரேஷன்கடைகளில் வெளியாட்கள் தலையீடு அதிகம் உள்ளதால் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.