அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வெடிப்பதை தடுக்கலாமே: துறை ரீதியான நடவடிக்கை அவசியம்
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் விமரிசையாக நடத்தப்படும் திருமணம், காதணி விழாக்கள், திருவிழாக்கள்,அரசியல் கட்சி கூட்டங்கள், இறுதி ஊர்வலங்களின் போது காதை செவிடாக்கும் வகையில் அதி பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளால் குழந்தைகள், முதியோர்கள், மாணவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்மாவட்டத்தில் அடிக்கடி நடக்கும் திருவிழாக்கள்,அரசியல் கட்சி கூட்டங்கள், ஊர்வலங்கள், இறுதி ஊர்வலங்களில் அதிக சத்தத்துடன் பெரிய பெரிய வெடிகள் வெடிக்கப்படுகிறது. இவை திடிரென காதை பிளக்கும் வகையில் அதிக ஒலி எழுப்புகின்றன. இதனால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கால்நடைகள், பறவைகள் இந்த சத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் பயந்து ஓடுகின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மனிதனின் காதுகள் 120 டெசிபல் அளவில் ஒலிகளை மட்டுமே தாங்க கூடியதாக உள்ளது. ஆனால் சக்தி வாய்ந்த பட்டாசுகள் ஒலிக்கும் போது இந்த அளவு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் இதயநோய் உள்ளவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். இறுதி ஊர்வலங்களில் போது ரோட்டில் அதிக பூக்கள் வீசப்படுகிறது. இதனை அகற்றுவது உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. மருத்துவமனைகள்,பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகளில் அதிக சக்திவாய்ந்த பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும். அதிகாரிகள் துணிந்து நடவடிக்கை எடுத்தால் தான் இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.