கொடை மலைப்பகுதியில் துவங்கியது காபி சீசன்
தாண்டிக்குடி : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியில் காபி சீசன் துவங்கி உள்ளது. இது ஜனவரியில் நிறைவடையும். தாண்டிக்குடி கீழ்மலையில் 30 ஆயிரம் ஏக்கரில் காபி சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபரில் பழங்கள் பழுக்க துவங்கி பறிக்கும் பணி நடக்கும். ஜனவரியில் சீசன் நிறைவடையும். 2024ல் காபி அதிகளவு உற்பத்தி செய்யப்படும் பிரேசில், வியாட்நாமில் காபி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் காபி தேவை அதிகரித்தது. இத்துடன் உள்நாட்டு தேவை அதிகரிப்பின் பின்னணியில் காபிக்கு மவுசு அதிகரித்தது. 2024ல் அராபிகா காபி கிலோ ரூ. 500க்கு விற்ற நிலையில் நடப்பாண்டில் சீசன் துவங்கிய நிலையில் கிலோ ரூ.550க்கு விற்பனையாகிறது. காபி வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,''ஐரோப்பிய நாடுகளின் தேவை, உள்நாட்டில் தேவை அதிகரிப்பதால் காபிக்கு நல்ல விலை கிடைக்கிறது. வரும் மாதங்களில் கிலோ ரூ.700 வரை விற்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. வரும் 5 ஆண்டுகளுக்கு காபி விலை குறைய வாய்ப்பில்லை,'' என்றார்.