உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் தொடரும் நெரிசல்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் தொடரும் நெரிசல்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் இருந்து காய்கறி மார்க்கெட்டுக்கு ஒரு ரோடு செல்கிறது. ரோட்டின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. ரோட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கடை அளவிற்கு அதிகமாக சில அடிகள் வரை ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ரோட்டின் அகலம் குறைந்து குறுகலாக மாறி வருகிறது. ஒரே நேரத்தில் எதிர் எதிரே வாகனங்கள் செல்லும்போது போதுமான இடைவெளி கிடைப்பதில்லை. இத்துடன் வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பு சரக்கு வாகனங்கள் ,டூவீலர்கள் பலமணிநேரம் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. ஒட்டன்சத்திரம் வடக்குப் பகுதியில் இருந்து திண்டுக்கல் ரோட்டிற்கு குறைந்த நிமிடத்தில் செல்ல இந்த மார்க்கெட் பைபாஸ் ரோடு பெரிதும் பயன்படுகிறது. இதன்காரணமாக இந்த ரோட்டில் டூவீலர் போக்குவரத்து அதிகமாக உள்ளது. குறித்த நேரத்தில் சென்று விடலாம் என நினைத்து இந்த ரோட்டில் வருபவர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். வர்த்தக நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் கடைகளை நீட்டிப்பு செய்து வருகின்றன. மேலும் மாலை நேரங்களில் இப்பகுதி சூப் கடைகளில் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனாலும் நெரிசல் உள்ளது. இந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.

டூவீலர்களால் நெரிசல்

விஸ்வரத்தினம், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை தலைவர்: காந்தி மார்க்கெட் செயல்பட்ட போது கூட இந்த அளவுக்கு நெரிசல் ஏற்படவில்லை. டூவீலர்கள் ரோட்டிலே நிறுத்தப்படுகிறது. ரோட்டின் அகலம் குறைந்து கொண்டே வருவதால் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் எதிரெதிரே செல்ல முடியாத நிலை உள்ளது. போக்குவரத்து போலீசார் இப்பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று ஆக்கிரமிப்பு வாகனங்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

ஆக்கிரமிப்பை அகற்றுங்க

டி.ஹெரால்டு ஜாக்சன், திண்டுக்கல் மாவட்ட இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர்: நகராட்சி நிர்வாகம் ரோட்டை அளந்து ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றி நெரிசல் இல்லாத போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் வடக்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு இந்த ரோட்டையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ரோட்டில் நெரிசல் காரணமாக போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை