தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்த மருத்துவ கல்வி இயக்குநர்
திண்டுக்கல்:திண்டுக்கல் திருச்சி ரோடு சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர்களை சந்தித்த மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.சிட்டி மருத்துவமனையில் டிச., 12 இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். புகை மூட்டம், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையில் 4 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவிலும், 31 பேர் லேசான காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களை நேற்று மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். டாக்டர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின் டீன் சுகந்தி ராஜகுமாரி அறையில் டாக்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.மருத்துவ கல்வி இயக்குநர் கூறுகையில், ''தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமுடன் உள்ளனர்,'' என்றார்.