காட்சிப் பொருளாக மாறிய மேல்நிலை குடிநீர் தொட்டி
மேலுார் : கொட்டக்குடியில் ரூ. 38 லட்சத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டி, ஐந்து மாதங்களுக்கும் மேலாக பயன்பாட்டிற்கு வராததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இக்கிராமத்தில் அய்யனார்புரம், புதிய ஆதி திராவிடர் காலனி பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ரூ. 3 லட்சத்து 21 ஆயிரத்து 860 ல் ஆழ்துளை கிணறு, ரூ. 35 லட்சத்தில் ஒரு லட்சம் கொள்ளளவுள்ள மேல்நிலைத் குடிநீர் தொட்டி கட்டப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இத் தொட்டியில் இருந்து 200 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டதோடு சரி. இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.அப்பகுதி சரவணன் கூறியதாவது : தொட்டியில் இருந்து வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குழாய்கள் சிறியதாக, தரமற்றதாக இருப்பதால் பரிசோதனையின் போது 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் தரமான, பெரிய குழாய் அமைத்து வினியோகிக்கும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் சரி செய்யவில்லை. ஆழ்துளைக் கிணறு, மேல்நிலைத் தொட்டி பயன்பாட்டுக்கு வராததால் மக்கள் பணம் ரூ. 38 லட்சம் வீணாகிவிட்டது. பிளாஸ்டிக் தொட்டி மூலம் விநியோகிக்கும் குடிநீரைக் குடிக்க முடியவில்லை. வெயில் அதிகமுள்ளதால் விரைந்து தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் கூறுகையில், குழாய் உடைப்பை சரி செய்து புதிய குழாய் அமைத்து மேல்நிலை தொட்டியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.