முருங்கை கிலோ ரூ.8 விவசாயிகள் விரக்தி
ஒட்டன்சத்திரம்:முருங்கை விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்தது. தங்கச்சி அம்மாபட்டி காந்தி மார்க்கெட்டில் எங்கு பார்த்தாலும் முருங்கைக்காய் மூட்டைகளே அதிகமாக இருந்தன. வரத்து அதிகரித்திருந்த நிலையிலும், வியாபாரிகள் வழக்கமான அளவிற்கே கொள்முதல் செய்ததால் முருங்கைக்காய் விலை படுவீழ்ச்சி அடைந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ, 15 ரூபாய்க்கு விற்ற முருங்கைக்காய், நேற்று கிலோ, 8 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. இந்த விலை முருங்கைக்காயை செடிகளில் இருந்து பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்பதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். கமிஷன் கடை உரிமையாளர் எல்.கே.எஸ். அப்பன் கூறுகையில், ''ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தான் முருங்கை விலை உச்சம் தொடும். ஆடி மாதத்தில் முகூர்த்த நாட்கள் இல்லாததால் காற்று பலமாக இருந்தாலும், முருங்கை விலை சரியத்தான் செய்யும். இந்த விலை இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும். முகூர்த்த நாட்கள் துவங்கிய பின் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு,'' என்றார்.