கொடை யில் பலியான பெண் காட்டு யானை: தாயை பிரிய மனமின்றி குட்டி பாசப்போராட்டம்
கொடைக்கானல்:கொடைக்கானலில் வயது முதிர்வால் பெண் காட்டு யானை மயங்கி விழுந்து பலியானது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன சரணாலயத்தில் வனவிலங்குகள் அதிகம் உள்ள நிலையில் இவற்றிற்கு போதுமான மேய்ச்சல் பகுதி , தண்ணீர் இல்லாததால் விவசாய நிலங்கள் , அதை சுற்றிய நீர் நிலைகளில் தஞ்சமடைகின்றன. கொடைக்கானல் வில்பட்டி பள்ளங்கி கோம்பையில் உள்ள கணேசபுரத்தில் சில தினங்களாக குட்டியுடன் சுற்றி திரிந்த பெண் யானை பட்டா நிலத்தில் மயங்கி விழுந்தது. வனத்துறையினர் கால்நடை டாக்டர்கள்சிகிச்சை அளித்தனர். எனினும் நேற்று முன்தினம் மாலை யானை இறந்தது. அதன் குட்டி யானை அருகில் யாரையும் நெருங்க விடாமல் பாதுகாத்தபடி பாசப்போராட்டம் நடத்தியது. வனத்துறையினர் லாவகமாக குட்டியை விரட்ட மற்றொரு யானை கூட்டத்துடன் சேர்ந்தது. இதன் பின் கால்நடை டாக்டர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்' பெண் யானைக்கு 55 வயதாகிறது. இரு ஆண்டுக்கு முன் குட்டி பிரசவித்த நிலையில் வயது முதிர்வால் சத்து பற்றாக்குறையால் மயங்கியது. தொடர் சிகிச்சையளித்தும் இறந்தது' என்றார். விழிப்புணர்வு இன்றி விபரீதம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டுமாடு, யானைகள் அவ்வப்போது பலியாகின்றன. விவசாயிகள் பயன்படுத்தும் உரம், பூச்சி மருந்துகளை முறையாக அப்புறப்படுத்தாமல் விளைநிலங்களிலேயே விட்டுவிடுவதால் அங்கு வரும் விலங்குகள் இவற்றை உண்பதோடு, வனப்பகுதியையொட்டிய மெயின் ரோட்டோரங்களில் வீசப்படும் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொட்டலங்களை உண்ணும் நிலையில் ஜீரணப் பிரச்னையால் அவதிப்பட்டு உயிரிழக்கின்றன. இது குறித்து வனத்துறையினர் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலையே இதற்கு காரணம். தற்போது காட்டு யானை இறந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும். எனவே வனத்துறை இனியாவது விழிப்புடன் செயல்பட வேண்டும்.