உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடுகளை குடைந்து கொடிக்கம்பங்கள், பேனர்கள் விழிப்பின்றி விபரீதம்

ரோடுகளை குடைந்து கொடிக்கம்பங்கள், பேனர்கள் விழிப்பின்றி விபரீதம்

திண்டுக்கல்லை பொறுத்தவரை எங்கு திரும்பினாலும் பேனர்களுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. பிறந்தாள், விருது விழா, நினைவுநாள் என அனைத்து கட்சிகளும் தங்களின் தலைவருக்கு பேனர்களை ரோட்டோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கின்றனர். குறிப்பாக ரோட்டை குடைந்து கம்பிகளை ஊன்றுகின்றனர். ஓட்டை போட்டு அதில் கம்புகளை பெருத்தி கொடிக்கம்பங்களை கட்டி விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் அவதிப்படுவது வாடிக்கையாகி வருகிறது.கட்சியினர் போலீசாரிடம் முறையான அனுமதியும் பெறுவதில்லை. அவர்களும் ஆளுங்கட்சி, கூட்டணி, எதிர்கட்சி என கண்டும் காணாமல் இருக்கின்றனர். பேனர்கள் எப்போது வேண்டுமானலும் காற்றில் பறந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதேபோல் நகரின் எல்லை, முக்கிய கடைவீதிப்பகுதிகளில் கட்டடங்களின் மாடிகளில் பல அடிகளில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இரும்பு கம்பிகளால் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள் காற்றின் வேகத்தில் விழவும் வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதங்கள் நேரும் முன் அதன் உறுதித்தன்மையை சரிபார்த்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ரோடுகளை குடைவதால் பொதுச்சொத்து வீணாகிறது என்பதை பற்றி கவலையில்லாமல், தங்களின் தலைவர்களை சந்தோஷப்படுத்த பொதுமக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்குகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி மக்கள் கூடும் இடங்களில் கட்சியினர், ஜாதி, சங்கங்கள் சார்பில் கொடி கம்பங்கள் நிறுவி உள்ளனர். பொது இடங்களில் அரசியல் கட்சி, ஜாதிய, சங்க கொடி கம்பங்களை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் எவரும் பின்பற்றவில்லை. வரும் காலம் தேர்தல் காலம் என்பதால் தற்போது அரசியல் கட்சியினரின் பல கூட்டங்கள் நடக்கிறது. இதனால் கொடிக்கம்பங்கள், பேனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க இவை மிகவும் அதிகமாகி ரோட்டை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்தும். எனவே உரிய வழிமுறைகளை பின்பற்றவும், விதிமுறைகளை வகுக்கவும் மாவட்ட நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 31, 2025 07:08

ஹல்லோ, கொஞ்சம் அசந்தால் திமுக ரௌடிகள் ஸாரி தொண்டர்கள் உங்கள் முதுகில் ஓட்டை போட்டு கொடியை நாட்டிவிட்டுப் போவார்கள். அவ்வளவு ஆபத்தானவர்கள் ஸாரி அன்பானவர்கள். எதெதற்க்கோ நீதிமன்றம் வெட்டியாய் தீர்ப்பு சொல்கிறது. இந்த பொறுப்பற்ற அரசியல்வாதிகளை, தொண்டர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள ஒரு சட்டம் போட முடியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை