உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் விற்க நிர்பந்தம் ; சம்பளத்தில் பிடிப்பதாக மிரட்டும் அதிகாரிகள்

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் விற்க நிர்பந்தம் ; சம்பளத்தில் பிடிப்பதாக மிரட்டும் அதிகாரிகள்

கொடைரோடு : கூட்டுறவு கடன் சங்கங்கள், ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் அல்லாத கூடுதலாக மளிகை பொருட்களை விற்பதற்கு மாவட்ட அதிகாரிகள் நிர்பந்திப்பதால் ரேஷன் கடை, கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் பாதிப்படைகின்றனர். தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, பாமாயில், சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு ரேஷனில் வழங்கி வருகிறது. நலிந்தோர், முதியவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சாமானிய, நடுத்தர வர்க்கத்தினர் பயனடைந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் ,அபிராமி கூட்டுறவு அங்காடி கண்காணிப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல் அதிகாரிகளாக மாவட்ட இணை, துணை பதிவாளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் ஆறு மாதங்களாக ரேஷன் குடிமை பொருட்கள் அல்லாத சாப்பாடு அரிசி, சமையல் எண்ணெய், சேமியா என வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை கூடுதலாக ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்து ஒரு மாதத்திற்குள் விற்று கொடுக்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் மளிகை பொருட்களின் விலையும் மார்க்கெட் விலையை விட கூடுதலாக இருக்கிறது. விற்றுத்தர இயலாத ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாகவும் ரேஷன் கடை ஊழியர்கள் புலம்புகின்றனர். ....... கட்டாயமாக்குவது ஏற்புடையதல்ல ரேஷன் கடைகளில் மூன்று விதமான பிரிவினர் பொருட்கள் வாங்குகின்றனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இலவச ரேஷன் அரிசியை மட்டுமே விரும்பி வாங்குகின்றனர். நடுத்தர மக்கள் அரிசிக்கு பதிலாக சர்க்கரையை வாங்குகின்றனர். இவ்வாறு இருக்க சேமியா, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சோப்பு போன்ற மக்கள் விரும்பாத பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி விற்றுத்தர கட்டாயமாக்குவது ஏற்புடையது அல்ல. ரேஷன் கடைகளில் விலை குறைவாக இருக்கும் என்பதால் தான் மக்கள் வருகின்றனர். இது போன்று மார்க்கெட் விலையை விட விலை உயர்ந்த பொருட்களை வாங்க நிர்பந்தித்தால் ரேஷன் கடைக்கு கூட சாதாரண மக்கள் வர மாட்டார்கள். மாவட்ட நிர்வாகம் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்பதை நிறுத்த வேண்டும். இதேபோல மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத உளுந்து, கோதுமை உள்ளிட்ட வற்றை ரேஷன் கடையில் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். வினோதினி,பா.ஜ.க., மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர்,வத்தலக்குண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை