உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வருவாயில் காட்டும் ஆர்வத்தை வளர்ச்சியில் காட்டாத வனத்துறை

வருவாயில் காட்டும் ஆர்வத்தை வளர்ச்சியில் காட்டாத வனத்துறை

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனசுற்றுலா தல வருவாயில் கவனம் செலுத்தும் வனத்துறை பராமரிப்பில் மெத்தன நிலையை கடைபிடிக்கிறது.சுற்றுலா தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். வனத்துறை மூலம் ஒருங்கிணைந்த வன மேம்பாட்டு வனச்சரகம் செயல்படுகிறது. இதன் கீழ் வன சுற்றுலாத்தலங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மர காடுகள், துாண்பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன.இவ்விடங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை நுழைவு கட்டணம், வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. இதை கண்காணிக்க பாம்பார்புரம் வன மேம்பாட்டு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்கள், தலைவர், செயலர் உள்ளனர். இதன் மூலம் வரும் வருவாயின் மூலம் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது வன மேம்பாட்டு குழு வாழ்வாதாரத்திற்கு உதவுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இங்குள்ள சுற்றுலா தல வருவாயில் மட்டும் வனத்துறை கவனம் செலுத்தி கட்டமைப்பு, அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்துவதில்லை.சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், பயணிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா , வன விலங்குகளிலிருந்து பயணிகள் பாதுகாப்பிற்கு வேலி இல்லாத நிலை , படிக்கட்டுகள், இருக்கைகள் சேதம், பராமரிப்பில்லாத பூங்காக்கள், மாற்றுத் திறனாளிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சாய்வு தள வசதி இல்லாதது,,முறைப்படுத்தப்படாத கார் பார்க்கிங், போதிய கழிப்பறையின்றி திறந்த வெளியை பயணிகள் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் என சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.பெயரளவிற்கு குணா குகையில் நுழைவாயில், யானை ஓவியம், காட்டுமாடு வடிவமைப்பு என மாயத் தோற்றங்களை மட்டும் வனத்துறை மேற்கொண்டுள்ளது. வன மேம்பாட்டு குழு மூலம் செயல்படும் கடை வருவாய், சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் நிதி உள்ளிட்டவை எதற்கு செயல்படுத்தப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாத வனத்துறை வருவாயில் மட்டும் கவனம் செலுத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அதிகாரிகள் இவ்விஷயத்தில் கள ஆய்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி