தம்மனம்பட்டியில் மேம்பாலம் இல்லாமல் அடிக்கடி விபத்து
வேடசந்துார்: வேடசந்துார் தம்மனம்பட்டி - கொன்னாம்பட்டி இடையே நெடுஞ்சாலை குறுக்காக செல்லும் நிலையில் அங்கு பாலம் வசதி இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதும் உயிர்ப்பலி ஏற்படுவதும் தொடர்கிறது. இப்பகுதி மக்களின் நலன் கருதி இங்கு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலை இருவழி சாலையாக இருந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் தற்போது கூடுதலான, விரைவான போக்குவரத்து அதிகரித்துள்ளதால் விபத்துக்கள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.வேடசந்துார் தம்மனம்பட்டி வழியாக இந்த நெடுஞ்சாலையை குறுக்காக செல்லும் ரோடு கொன்னான்ம்பட்டி, குறியாண்டி குளம், நாராயணபுரம், ஓட்டநாகம்பட்டி வழியாக ஒட்டன்சத்திரம் செல்லும் ரோட்டில் இணைகிறது. கிரமங்களில் இருந்து வேடசந்துார் வரும் பொதுமக்கள் ,பள்ளி மாணவர்கள் இந்த வழியாக நெடுஞ்சாலையை குறுக்காக கடந்து தான் வந்து சேர வேண்டும். திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையை குறுக்காக கடந்து செல்வதை தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை. இதனால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடை பெறுகின்றன. இதுவரை 15க்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். பலர் அடிபட்டு கை கால்களை இழந்துள்ளனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேடசந்தூர் போலீசார் ரோட்டின் குறுக்காக போக்குவரத்தை தடை செய்து சுற்றிச் செல்லும் வகையில் இரும்பு கம்பிகளை அமைத்தனர். அப்போதே ஒன்று திரண்ட மக்கள் அந்த இரும்பு தகடுகளை பிரித்து எடுத்தனர். அதன் பிறகு மீண்டும் அதே வழித்தடத்தில் தான் தொடர்ந்து நடந்தும், டூவீலர்,கார்களிலும் குறுக்காக சென்று வருகின்றனர். இதே போல் தான் பள்ளி வாகனங்களும் குறுக்காக சென்று வருகின்றன. பெரும் விபத்து நடப்பதற்கு முன் இந்த பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நடவடிக்கை எடுங்க
பி.தான்தோன்றிசாமி, தொழில் அதிபர், கொன்னாம்பட்டி: தம்மனம்பட்டி கொன்னாம்பட்டி இடையே குறுக்காக செல்லும் நெடுஞ்சாலையால் அடிக்கடி விபத்துக்கள் தொடர் கதையாக உள்ளது. இதுவரை நடந்த விபத்துக்களில் இந்த இடத்தில் மட்டும் பத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பார். மக்களின் நலன் கருதி இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் இல்லையேல் சுரங்கப்பாதை அமைக்கலாம். மாவட்ட நிர்வாகமும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . விபத்துக்கு உள்ளாகின்றனர்
சரணம், கடை உரிமையாளர், தம்மனம்பட்டி: நெடுஞ்சாலை அருகே தான் எங்களது பெட்டிக்கடை உள்ளது. இந்த இடத்தில் ரோட்டை கடந்து செல்லும்போது பலர் விபத்துக்கு உள்ளாகின்றனர். ஞாயிறு வார சந்தை அன்று கூடுதலான வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் விவசாயிகளும் தங்களது விளைவு பொருட்களை இந்த வழியாகத்தான் கொண்டு செல்கின்றனர். வேலைக்கு செல்வோர், பள்ளி மாணவர்களும் இந்த வழியாகத்தான் கடந்து செல்கின்றனர் இப்பகுதி மக்களின் நலன் கருதி மேம்பாலம் அமைக்க வேண்டும்.