ரேஷன் பொருள் வாங்க கைரேகை பதிவிற்கு அரை கி.மீ., நடை
பழநி: பழநி அருகே பொருந்தல் பாலாறு டேம் பகுதியில் ரேஷன் பொருட்களைப் பெற கைரேகை பதிக்க அரை கிலோமீட்டர் துாரம் பொதுமக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.ரேஷன் பொருட்களை பெற பயோமெட்ரிக் கருவி மூலம் விரல் ரேகைகளை பதித்து பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. பொருந்தல் பாலாறு டேம் பகுதிகளில் ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் பி.எஸ்.என்.எல்., நிறுவன அலைபேசி சிக்னல்கள் சரிவர கிடைப்பதில்லை.இதனால் பொருந்தல் பாலாறு டேம் பகுதியில் உள்ள பெரியம்மாபட்டி ஊராட்சி உட்பட்ட தாமரைக்குளம், கரிகாரன்புதுார், பொருந்தலாறு டேம் பகுதிகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம், செய்யும் தற்காலிக ரேஷன் கடையில் பயோமெட்ரிக் இயந்திரம் சிக்னல் பிரச்னையால் செயல்படுவதில்லை. இந்த கடையில் 154 குடும்பத்தினர் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இங்கு பொருட்கள் பெற கைரேகை பதிவு செய்ய ரேஷன் கடையில் இருந்து அரை கிலோ மீட்டர் துாரத்திற்கு அப்பால் சிக்னல் கிடைக்கும் இடத்தில் விற்பனையாளர் சென்று அமர்ந்து பொதுமக்கள் ரேகையை பதிவு செய்கின்றனர். அதன் பின் கடைக்கு அரை கிலோ மீட்டர் வந்து ரேஷன் பொருட்களை வாங்கும் நிலையில் மக்கள் உள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இதனை சரி செய்ய பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அங்கு அலைபேசி சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.