ஹிந்து வன்னியர்கள் எம்.பி.சி., உரிமையை கிறிஸ்தவ வன்னியர்களுக்கும் வழங்க மாநாடு எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து அமைப்பினர் கைது
திண்டுக்கல்:ஹிந்து வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட எம்.பி.சி.,உரிமையை கிறிஸ்தவ வன்னியர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல்லில் நடந்த கிறிஸ்தவ வன்னியர் இட ஒதுக்கீடு மாநில மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து மக்கள் கட்சி தொண்டரணி,ஹிந்து மகா சபா நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லில் நடந்த மாநாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது என்றும், இது மதம் மாற்றும் ஒரு முயற்சி எனக்கூறி ஹிந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி, அகில இந்திய ஹிந்து மகா சபா அமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹிந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி தலைவர் மோகனை திண்டுக்கல் வடக்கு போலீசார் காலை கைது செய்தனர். அவரை விடுவிக்க வலியுறுத்தி அக்கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் - - பழநி சாலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.