கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாருவது அவசியம்...: மழைகாலம் தொடங்கிவிட்டதால் நீர் தேங்காமல் இருக்க
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம் என்பதால் மழை அதிகளவு பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே, மாநகராட்சி, நகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டும். அதோடு, வாய்க்கால்களை அடைப்பது போல உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிட வேண்டும். அப்போதுதான் மழைநீர் தேங்குவதை தவிர்க்க முடியும். இந்த பணிகளை மேற்கொண்டாலே மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுவது தவிர்க்கப்படும்.அதேபோல், காலியிடங்களில் மழைநீர் தேங்கி நோய்தொற்றுக்கு உள்ளாகும் முன் சம்மந்தப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மழைநீர் தேங்கா வண்ணம் கால்வாய்களை ஏற்படுத்திட வேண்டும். பொருட்கள், கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை வைத்து கால்வாய்களை அடைத்து விடுவதால் நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி விடுகிறது. எனவே, பருவ மழை தீவிரமடையும் முன் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பணிகள் தொடங்கவில்லை
மழைக்காலம் தொடங்கி விட்டது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என தெரியவில்லை. பெரும்பாலான இடங்களில் துார்வாருவது போன்ற பணிகள் இதுவரை தொடங்கவில்லை. வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என்பதால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, சாக்கடை கால்வாய்களை துார்வாரினாலே நீர் தேங்கி வீடுகளுக்கு புகுவது தவிர்க்கப்படும். எனவே, பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சதீஸ்குமார், முன்னாள் நகர தலைவர், பா.ஜ., கிழக்கு, திண்டுக்கல்.